சென்னை, ‘கேபிள் ஒளிபரப்புக்கான, புதிய கட்டண விபரங்களை, வரும், 5ம் தேதிக்குள், வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும்’ என, எம்.எஸ்.ஓ.க்களை, ‘டிராய்’ என்ற, தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.கேபிள், ‘டிவி’ ஒளிபரப்பில், நாடு முழுவதும், ஜனவரி முதல், ‘அலகாட்’ என்ற, விரும்பிய சேனல்களை, வாடிக்கையாளர்களே தேர்வு செய்து கொள்ளும் முறை அமலுக்கு வருகிறது. டிராய் உத்தரவின்படி, புதிய நடைமுறையில், தங்கள் சேனலுக்கான கட்டணத்தை, ‘டிவி’ நிறுவனங்களே நிர்ணயித்து கொள்ளலாம்.இதையடுத்து, தனியார், ‘டிவி’ நிறுவனங்கள், தங்களது சேனல்களுக்கான கட்டணத்தை நிர்ணயித்து, விளம்பரப்படுத்தி வருகின்றன. புதிய கட்டண விவரங்களை, வரும், 5ம் தேதிக்குள், வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்க வேண்டும் என, எம்.எஸ்.ஓ.,க்களுக்கு, டிராய் அமைப்பும் அறிவுறுத்தி உள்ளது.இதுகுறித்து, நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் இயக்குனர், எஸ்.சரோஜா கூறியதாவது:கேபிள் ஒளிபரப்பில், ‘அலகாட்’ என்ற புதிய முறை, ஜன., முதல் அமலுக்கு வருகிறது. இதனால், டிச., 29க்கு பின், கட்டண சேனல்களின் சேவை துண்டிக்கப்படும் என, வெளியாகும் தகவல் தவறானது.புதிய முறையின் படி, மாதக் கட்டண விவரங்களை, ‘டிவி’ நிறுவனங்கள், இன்றைக்குள் நிர்ணயிக்க வேண்டும். இலவச சேனல்களுக்கு ஒரு கட்டணம்; பல்வேறு கட்டண சேனல்கள் அடங்கிய தொகுப்புக்கு ஒரு கட்டணம்; தேவையான சேனல்களை, வாடிக்கையாளர்களே தேர்வு செய்வதற்கு ஒரு கட்டணம் என, கட்டணம், மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.இவற்றுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் குறித்த விவரங்களை, எம்.எஸ்.ஓ.,க்கள், வரும், 5ம் தேதிக்குள், வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்க வேண்டும். அதில், தங்களுக்கான சேவையை, வரும், 20ம் தேதிக்குள் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய வேண்டும். அதுவரை, சேனல்களின் ஒளிபரப்பை துண்டிக்க கூடாது என, டிராய் அறிவுறுத்தி உள்ளது. மேலும், புதிய முறையை அமல்படுத்துவதற்கான அவகாசம் நீட்டிக்கப்படவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.