சென்னை, ”பொங்கல் பண்டிகைக்கு, சென்னையில் இருந்து வெளியூர் செல்வோர் வசதிக்காக, 14 ஆயிரத்து, 263 பஸ்கள் இயக்கப்படும்,” என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் இயக்குவது மற்றும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது குறித்து, போக்குவரத்து மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன், அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று ஆலோசனை நடத்தினார்.தலைமை செயலகத்தில் நடந்த ஆலோசனைக்கு பின், விஜயபாஸ்கர் கூறியதாவது:கடந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு முன், போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் நடத்தியதால், மூன்று நாட்கள் மட்டுமே, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அப்போது, சென்னையில் இருந்து, 11 ஆயிரத்து, 628 பஸ்கள் இயக்கப்பட்டன. இவற்றில், 4.92 லட்சம் பேர் பயணித்தனர்.இந்த ஆண்டு பொங்கலுக்கு, நான்கு நாட்களுக்கு, சென்னையில் இருந்து, 14 ஆயிரத்து, 263 பஸ்களும், வெளியூர்களில் இருந்து, 24 ஆயிரத்து, 708 பஸ்களும் இயக்கப்படும். இந்த பஸ்களில், ஆறு லட்சம் பேர் பயணிப்பர் என, கருதுகிறோம். தேவைக்கேற்ப, கூடுதல் பஸ்களும் இயக்கப்படும்.ஆம்னி பஸ்களில், அதிக கட்டணம் வசூலித்தால், 1800 425 56151 என்ற, கட்டணமில்லாத அழைப்புக்கு புகார் அளிக்கலாம். பின், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆம்னி பஸ்கள் விதிமீறலில் ஈடுபட்டால், பஸ்கள் பறிமுதல் செய்யப்படும்.சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவு, வரும், 9ம் தேதி துவங்கும். சென்னை, கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில், சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்படும். மீண்டும், ஜன., 2ல், ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. அதன்பின், பொங்கல் முடிந்து திரும்புவோருக்காக இயக்கப்படும், பஸ்களின் எண்ணிக்கை குறித்து அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

தற்காலிக பஸ் நிலையம் எங்கேசென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், ஆறு இடங்களில், தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.. ஆந்திரா செல்லும் பஸ்கள், மாதவரம் புதிய பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்படும்; கடலுார், புதுச்சேரி, சிதரம்பரம் செல்லும் பஸ்கள், கே.கே.நகரில் இருந்து இயக்கப்படும். கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பஸ்கள், தாம்பரம், ‘மெப்ஸ்’ பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். திருவண்ணாமலை செல்லும் பஸ்கள், தாம்பரம் ரயில் நிலையம் அருகிலுள்ள பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். காஞ்சிபுரம், செய்யார், வேலுார், ஆரணி, ஆற்காடு, திருப்பத்துார், ஓசூர் செல்லும் பஸ்கள், பூந்தமல்லியில் இருந்து இயக்கப்படும். கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து, மற்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *