சென்னை: ஆடிட்டர் பதவிக்கான சி.ஏ., தேர்வுகளை ஐ.சி.ஏ.ஐ., என்ற இந்திய சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் அமைப்பு நடத்துகிறது. இந்த ஆண்டு நவம்பரில் புதிய பாட திட்டம் அறிமுகமானது. பழைய பாட திட்டத்திலும் தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று வெளியாகின. பழைய பாட திட்டத்தில் இறுதி தேர்வில் 1.09 லட்சம் பேர் பங்கேற்றனர். அவர்களில் 12.75 சதவீதமான 13 ஆயிரத்து 909 பேர் சி.ஏ., சான்றிதழ் பெற தகுதி பெற்றுள்ளனர்.
புதிய பாட திட்டத்தில், 15 ஆயிரத்து, 503 பேர் தேர்வு எழுதி 6.83 சதவீதமான 1,060 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நவம்பரில் நடந்த அடிப்படை பயிற்சி தேர்வில் 48 ஆயிரத்து 702 பேர் பங்கேற்று 44.12 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். டிசம்பரில் நடந்த பொது தகுதி தேர்வில் 25 ஆயிரத்து 37 பேர் பங்கேற்று 36.10 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி தேர்வில் ராஜஸ்தான் குஜராத் மேற்கு வங்கம் சத்தீஸ்கர் மாணவர்கள் தேசிய அளவில் ரேங்க் பெற்றுள்ளனர். அடிப்படை தேர்வில் தேசிய அளவில் மூன்று பேர் மூன்றாம் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் தமிழகம் சேலத்தை சேர்ந்த மிருதஞ்சயன் என்ற பட்டதாரியும் ஒருவர்.