சென்னையில் கோடைகாலத்தில் அதிக மின்பளு (ஓவர் லோடு) காரணமாக மின்தடை ஏற்படாமல் இருக்க, 17 ஆயிரம் மின்விநியோக பெட்டிகளை பொருத்த மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
சென்னையில் மின்சார கேபிள்கள் வாயிலாக, டிரான்ஸ்பார்மர், மின்விநியோக பெட்டிகள் உதவியுடன் மின்வாரியம் மின்சப்ளை செய்து வருகிறது. இதற்காக, 85 ஆயிரம் மின்விநியோகப் பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. அதில், பல பெட்டிகள் சேதம் அடைந்துள்ளன. இவை பொருத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால், மழை மற்றும் வெயில் பட்டு அவை துருப்பிடித்து சேதம் அடைந்துள்ளன. சமூக விரோதிகள் சிலர் மின்விநியோகப் பெட்டிகளின் கதவுகளை திருடி விற்று விடுகின்றனர்.
இதனால், போதிய அளவு மின்சாரம் கிடைத்தாலும் மின்பெட்டிகள் சேதம் காரணமாக சென்னையில் சில இடங்களில் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டு வருகிறது. மேலும், இவ்வாறு சேதம் அடைந்த பெட்டிகளில் உள்ள கம்பிகள் திருடப்படுவதோடு, வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் கம்பிகளால் விபத்துகளும் ஏற்படுகின்றன. இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், மின்வாரியம் புதிதாக 17 ஆயிரம் மின்விநியோக பெட்டிகளை பொருத்த முடிவு செய்துள்ளது.
இந்தப் பெட்டிகள் நல்ல தரத்துடனும், பாதுகாப்பு அம்சங்களும் கொண்டிருக்கும். இவை துருப்பிடிக்காமல் இருப்பதோடு, மின்வாரிய ஊழியர்களை தவிர வேறு யாராலும் இவற்றை திறக்க முடியாது. இதன்மூலம், கோடை காலத்தில் அதிக மின்பளு இருந்தாலும் மின்தடை ஏற்படாமல் சீரான முறையில் மின்விநியோகம் செய்ய முடியும். இவ்வாறு மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.