இன்றைய இளம் தலைமுறையினர் (Millennial) பணி வாய்ப்புகள் மற்றும் தொழில் நிலவரம் ஆகியவற்றில் குறிப்பிட்ட வளர்ச்சியை அடைந்தவுடன் தங்களுக்கென சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருப்பதாக பல்வேறு ரியல் எஸ்டேட் கள ஆய்வுகள் குறிப்பிட்டிருக்கின்றன.
தற்போதைய காலகட்டத்தில் அரசாங்கம் அறிவித்துள்ள பல திட்டங்களின் மூலம் வீடு வாங்குபவர்களுக்கான பல சலுகைகள் இருக்கிறன. வங்கிகள் அல்லது வீட்டு வசதி நிதி நிறுவனங்களும் எளிமையான நடைமுறைகளில் வீட்டு கடன்களை வழங்குகின்றன. வீட்டு கடன் பெற விண்ணப்பிக்கும்போது வங்கிகள் பல்வேறு கடன் திட்டங்கள் பற்றி குறிப்பிட வாய்ப்பு உள்ளது. அவற்றில் கவனிக்கத்தக்க இரு வகை கடன் திட்டங்கள் பற்றி ரியல் எஸ்டேட் நிதி ஆலோசகர்கள் தெரிவிப்பதாவது :
* முதலாவது, கடன் பெற்ற முதல் ஒரு சில வருட காலகட்டத்திற்கு குறைவான மாதாந்திர தவணைகளை செலுத்தும் வகையில் உள்ள ‘ஸ்டெப் அப் லோன்’ ஆகும். இது ‘சர்ப்’ (SURF-Step Up Repayment Facility) கடன் திட்டம் என்றும் சொல்லப்படும்.
* இரண்டாவது கடன் திட்டமானது ஏற்கெனவே வங்கியில் வீட்டு கடன் பெற்று திருப்பி செலுத்தி வரும் நிலையில், வீடு விரிவாக்கம் அல்லது உள் கட்டமைப்பு மாற்றம் ஆகிய காரணங்களுக்காக பெறக்கூடிய ‘டாப் அப் லோன்’ (Top-Up Loan) திட்டம் ஆகும்.
‘ஸ்டெப் அப் லோன்’ சொந்தமாக வீடு வாங்க நினைக்கும் இளைய தலைமுறையினருக்கு மாதாந்திர தவணை தொகை சுமையாக அமையாமல், இந்த திட்டத்தில் முதல் சில வருடங்களுக்கு இ.எம்.ஐ தொகையை குறைவாக கணக்கிடப்படும். பின்னர், காலப்போக்கில் பதவி உயர்வு மற்றும் வருவாய் அதிகரிப்பு ஆகியவற்றுக்கேற்ப மாதாந்திர தவணை தொகையை அதிகமாக திருப்பி செலுத்தலாம்.
தவணை தொகை அதிகரிப்பு எவ்வளவு என்பதை, கடன் பெற்றவருக்கு எதிர்காலத்தில் கிடைக்கும் வருமான உயர்வுகளை பொறுத்து முடிவு செய்யப்படும். கடனுக்கான கால அவகாசத்தை கடன் பெறுபவரின் வயது, கிரெடிட் ஸ்கோர் மற்றும் கடனை திருப்பி செலுத்தும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் வங்கிகள் அல்லது வீட்டு கடன் நிறுவனங்கள் முடிவு செய்கின்றன. இவ்வகை கடன் திட்டம் இளம் வயதினருக்கு நல்ல வாய்ப்பு என்பது பலரது கருத்தாகும்.
‘டாப் அப் லோன்’ ஏற்கெனவே வீட்டு கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தி வரும் நிலையில் கூடுதலாக கடன் பெறும் வாய்ப்பை அளிப்பது டாப் அப் லோன் திட்டம் ஆகும். இதன் மூலம் வீட்டை புதுப்பித்தல், வீடு விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக கடன் பெறலாம். தனி நபர் கடனுடன் ஒப்பிடும்போது இவ்வகை கடனுக்கு வட்டி விகிதம் குறைவு என்பதையும் நிதி ஆலோசகர்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றனர்.
‘டாப் அப் கடன்’ பிரதான கடனுடன் இணைக்கப்பட்ட தனிப்பட்ட கடனாக கருதப்படும். இதற்கென தனியாக கடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும். மேலும், இவ்வகை கடன்களுக்கு வருமான வரி விலக்கு கிடைக்காது என்பது கவனிக்கத்தக்கது.
இவ்வகை கடனை வாங்குபவர், கடன் வழங்கும் வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் வாடிக்கையாளர் என்ற நிலையில் ஆவணங்கள் அளிக்கவேண்டிய செயல்முறைகள் குறைவாக இருக்கும். கடன் விண்ணப்பமும் குறைவான காலகட்டத்திலேயே எளிதில் செயலாக்கம் பெற்றுவிடும்.