சென்னை: ‘பத்தாம் வகுப்பு தனி தேர்வர்களுக்கு வரும் 25ம் தேதி முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும்’ என தேர்வு துறை அறிவித்துள்ளது. இது குறித்து அரசு தேர்வு துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனி தேர்வர்களாக விண்ணப்பித்தவர்கள் தத்கல் திட்டத்தில் விண்ணப்பித்தவர்கள் என அனைவருக்கும் வரும் 25ம் தேதி முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும். தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 25ம் தேதி பிற்பகல் முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்ட தேர்வு மையத்திற்கு சென்று தேர்வு மைய கண்காணிப்பாளர் அல்லது தலைமை ஆசிரியரை அணுகி செய்முறை தேர்வு தேதியை தெரிந்து கொள்ள வேண்டும். செய்முறை பயிற்சி வகுப்புகள் எந்த பள்ளியில் நடந்ததோ அதே பள்ளியிலேயே செய்முறை தேர்வும் நடத்தப்படும்.
வரும் 26 முதல் 28 வரையிலும் செய்முறை தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட் இல்லாத தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறை தேர்வில் பங்கேற்க அனுமதியில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.