பொறியியல் படிக்கும் மாணவர்கள் அரியர் தேர்வுகளை அடுத்த செமஸ்டரிலேயே எழுதிக் கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பின்பற்றப்பட்டு வந்த முந்தைய நடைமுறையின்படி, முதல் பருவத் தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள், அதனை 2-ஆவது பருவத்தில் எழுதிக் கொள்ள முடியும். இதற்கு பதிலாக புதிய நடைமுறையை அண்ணா பல்கலைக்கழகம் வகுத்தது. அதற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், பல்கலைக்கழக அகாடெமிக் கவுன்சில் விதிகளில் திருத்தம் செய்து புதிய நடைமுறையை தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி, மாணவர்கள் முதல் செமஸ்டரில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்தால், அதனை அடுத்து வரும் 2-ஆவது செமஸ்டரிலேயே எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முதல் செமஸ்டரில் அனைத்து பாடங்களிலும் வெற்றி பெறாமல், 5-ஆவது செமஸ்டரை எழுத முடியாது என தெரிகிறது. கல்வியாண்டின் இறுதி கட்ட செமஸ்டர்களில் தோல்வியடையும் மாணவர்கள், அதனை அடுத்தடுத்து வரும் 3 செமஸ்டர்களில் எழுதிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரியர் முறையைப் போன்றே, தேர்வு விடைத்தாளை மதிப்பீடு செய்யும் முறையிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள், பல்கலைக்கழக சிண்டிகேட் குழு ஒப்புதலுக்குப்பின் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.