சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்று (மார்ச் 01) காலை 10 மணிக்கு துவங்கின. காலை 10 மணிக்கு தேர்வு துவங்கி மதியம் 12.45 மணிக்கு முடிவடையும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2,941 தேர்வு மையங்களில் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.
முதல் நாளான இன்று மொழிப்பாடத் தேர்வு நடைபெறுகிறது. தேர்வு வளாகத்திற்குள் ஆசிரியர்கள் மொபைல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளில் ஈடுபடும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தேர்வறை கண்காணிப்பு பணியில் 49,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முறைகேடுகளை தடுக்க 4000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மார்ச் 19-ஆம் தேதி தேர்வுகள் நிறைவடையும் நிலையில் ஏப்ரல் 19-ல் முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
இந்த ஆண்டு, முதன் முறையாக 100 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். பிளஸ் 2 தேர்வுகளில் இதுவரை பாடம் ஒன்றுக்கு 200 மதிப்பெண்கள் என 1200 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடைபெற்று வந்த நிலையில், இந்த ஆண்டு பாடம் ஒன்றுக்கு 100 மதிப்பெண்கள் வீதம் 600 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடைபெறுகின்றன. அதேபோன்று மொழிப்பாடங்களுக்கு இரண்டு தாள் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டு இந்த ஆண்டு ஒரே தாளாக தேர்வுகள் நடைபெறுகின்றன.