சென்னை: கே.வி., எனப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு இன்று முதல் ‘ஆன்லைன்’ பதிவு துவங்குகிறது. நாடு முழுவதும், 1,199 கே.வி., பள்ளிகள் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 14 பள்ளிகள் உட்பட தமிழகத்தில் மட்டும் 48 கே.வி., பள்ளிகள் உள்ளன.

இந்த பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கை ‘கே.வி.சங்கதன்’ என்ற, கேந்திரிய வித்யாலயா கமிஷனரகம் வழியே ஆன்லைனில் நடத்தப்படுகிறது. இந்த பள்ளிகளில், எல்.கே.ஜி., – யு.கே.ஜி., போன்ற கே.ஜி., வகுப்புகள் கிடையாது. ஒன்றாம் வகுப்பில் தான் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். நடப்பு கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை சென்னை மண்டல துணை கமிஷனர் மணி நேற்று வெளியிட்டார்.

அதில் கூறியிருப்பதாவது: ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று காலை 8:00 மணிக்கு துவங்க உள்ளது. மார்ச் 19 மாலை 4:00 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. கே.வி., தலைமையகத்தின், kvsonlineadmission.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

மேலும், அதிகாரப்பூர்வ, ‘மொபைல் ஆப்’பையும் பயன்படுத்தலாம். அதேபோல் பிளஸ் 1 தவிர, இரண்டாம் வகுப்பு முதல் மற்ற வகுப்புகளுக்கு, ஏப்., 2ல், ஆன்லைன் பதிவு துவங்கும். ஏப்., 9 மாலை 4:00 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். பிளஸ், 1 சேர்க்கைக்கு, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதும் விண்ணப்பப் பதிவு துவங்கும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *