சென்னை: மத்திய பல்கலைகளில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு மே 25ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா, குஜராத், ஹரியானா, ஜம்மு – காஷ்மீர், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், பீஹார், தமிழகம் உட்பட, 11 மாநிலங்களில், மத்திய பல்கலைகள் செயல்படுகின்றன. இந்த பல்கலைகளில் மாணவர்களை சேர்க்க ஆண்டு தோறும் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த முறை மத்திய பல்கலைகள் மட்டுமின்றி மஹாத்மா காந்தி மத்திய பல்கலை அசாம் பல்கலை பெங்களூரு அம்பேத்கர் பொருளியல் கல்லுாரி ஆகியவற்றுக்கும் மத்திய நுழைவு தேர்வு வழியாகவே மாணவர்கள் சேர்க்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவு தேர்வு, மே, 25, 26ம் தேதிகளில் நடக்கிறது.
இதற்கான ஆன்லைன் பதிவை, ஏப்., 13 வரை மேற்கொள்ளலாம் என அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான நுழைவு தேர்வை பெங்களூரு அம்பேத்கர் பொருளியல் கல்லுாரி ஒருங்கிணைத்து நடத்த உள்ளது. கூடுதல் விபரங்களை www.cucetexam.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.