சென்னையில் ஏற்பட்ட பனிமூட்டத்தால் விமானங்களை தரையிறக்குவதிலும், ரயில்களை இயக்குவதிலும் இன்று (28.11.2022) காலை தாமதம் ஏற்பட்டுள்ளது.
பனிமூட்டம் காரணமாக, அதிகாலை முதலே சென்னையிலும், புற நகர் பகுதிகளிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பனிமூட்டத்தால் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பெங்களூர், ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்த விமானங்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே தாமதமாக தரையிறக்கப்பட்டன.
அதேபோல, சென்னை – அரக்கோணம் இடையே காணப்பட்ட பனிமூட்டம் காரணமாக, ரயில்களின் வேகம் குறைத்து இயக்கியுள்ளனர். இதனால், 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் இன்று காலை தாமதமாக இயக்கப்பட்டன. மேலும், சாலைகளிலும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.