பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் வார இறுதி நாட்களில் பள்ளி மாணவ – மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் மாமல்லபுரத்தில் குவிந்து வருகின்றனர். மேலும் மாமல்லபுரத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், சென்னை புறநகர் பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் சென்னை பிராட்வே, கோயம்பேடு, தியாகராய நகர் ஆகிய பகுதிகளிலிருந்து மாமல்லபுரத்திற்கு மாநகர் ஏ.சி பஸ் (குளிர்சாதன பஸ்) இயக்கப் பட்டன. ஆனால் நாளடைவில் அவை பழுதானதால், சீரமைக்கப்படாமல் அந்த பஸ் சேவைகள் அனைத்தும் ரத்தாகியது.

தற்போது கோடை காலத்தில் கடும் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் சாதாரண பஸ்சில் மக்கள் பயணம் செய்து அவதிப்பட்டு வந்தனர். மாமல்லபுரம் சுற்றுலா முக்கியத்துவம் கருதி இந்த பகுதிக்கு சென்னையிலிருந்து ஏ.சி. பஸ் இயக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

இந்த நிலையில், சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாகம் தற்போது அடையாறில் இருந்து மாமல்லபுரத்திற்கு, சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் மாநகர ஏ.சி. பஸ்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது.

சென்னை – மாமல்லபுரம் இடையே, முட்டுக்காடு சுற்றுலா வளர்ச்சிக்கழக படகு குழாம், வடநெம்மேலி முதலைப்பண்ணை, திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில், கோவளம் நீலக்கொடி கடற்கரை போன்ற சுற்றுலா தலங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *