கனமழை காரணமாக சென்னை வரும் 10 விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. அதன்படி துபை, தோகா, அபுதாபி, லண்டன், சார்ஜா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த விமானங்கள் திருப்பிவிடப்பட்டன.
அதேவேளையில், கனமழையால் சென்னையில் இருந்து 17 பன்னாட்டு விமானங்களும் தாமதமாக புறப்பட்டன. தமிழகத்திதல் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்து வரும் கனமழையால் ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் நேற்று ஒரேநாளில் மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 14செ.மீ மழையும், நுங்கம்பாக்கத்தில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவே மழை பெய்து வருகிறது என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் விளக்களித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் கூறியதாவது, தமிழகம் அருகே உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவே மழை தொடர்கிறது.
தென்சென்னை பகுதிகளில் ஒரே இரவில் இயல்பை விட 3 மடங்கு அளவில் மழை கொட்டித்தீர்த்து உள்ளது. மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்கு சென்னையில் மழை தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே தமிழ்நாடு, புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்றும் தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.