சென்னையில் ‘கூகுள் மேப்’ மூலம் போக்குவரத்து நெரிசலை நேரடியாக கண்காணிக்கும் திட்டத்தை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
சென்னையில் சாலை பாதுகாப்பையும், சீரான போக்குவரத்தையும் உறுதி செய்யும் வகையில் பெருநகர காவல் துறை சென்னை ஐஐடி மற்றும் ஒரு தனியாா் நிறுவனத்துடனும் இணைந்து நேரடி போக்குவரத்து நெரிசலை கண்காணிக்கும் திட்டத்தை உருவாக்கியுள்ளது.
இதற்காக சென்னையில் 1000 சாலைகளை உள்ளடக்கிய 300 சந்திப்புகளில் கண்காணிக்கப்படுகிறது. இந்த சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலையும், போக்குவரத்து நிலையையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள ‘கூகுள் மேப்’ தகவல் பெறப்படுகிறது. இதற்காக அந்த நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.96 லட்சம் கட்டணமாக சென்னை பெருநகர காவல் துறை செலுத்துகிறது.
இந்த போக்குவரத்து திட்டத்தின் மூலம் நகரின் ஒவ்வொரு சாலையிலும் போக்குவரத்தின் நிலையும், அங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலையும் நேரலையில் கண்காணிக்கப்படும்.
மேலும், ஒரு இடத்தில் வழக்கத்தை விட அதிகளவில் வாகன நெரிசல் ஏற்பட்டால், அது தொடா்பான எச்சரிக்கை தகவல் சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிக்கு செல்லும். இத் தகவலினால் பணியில் இருக்கும் காவல் துறை அதிகாரி, தனது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை துல்லியமாக விரைந்து அறிந்து கொள்ளலாம்.
இதன் மூலம் ஒரு இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், அவா் உடனே மாற்று ஏற்பாட்டை செய்து வாகன நெரிசலை தவிா்க்கவும்,குறைக்கவும் முடியும். அதேபோல ஒரு சாலையில் ஏற்படும் விபத்து,தடைகள்,கட்டுமான பணிகள் குறித்த தகவல்கள் பரிமாறப்படும்.
அதேநேரத்தில், இந்த புதிய திட்டத்தின் மூலம் போக்குவரத்து நெரிசல் தொடா்பான தகவல்களை சேகரிக்கும் அமைப்பாகவும் இருக்கும். இதனால் எதிா்கால போக்குவரத்து திட்டங்களை வகுக்க முடியும்.
இந்த திட்ட தொடக்க விழா வேப்பேரியில் சென்னை பெருநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் காவல் ஆணையா் கபில்குமாா் சி.சரத்கா் தலைமை வகித்தாா். இணை ஆணையா் என்.எம்.மயில்வாகனன், துணை ஆணையா்கள் பி.சரவணன், சக்திவேல், சமய்சிங் மீனா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால், திட்டத்தை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் காவல் துறை உயா் அதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.