முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப்பதிவு வியாழக்கிழமை (ஜூலை 6) தொடங்கியது.

இந்தியா முழுவதும் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ் மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கு 42,500-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.

தமிழகத்தில் மட்டும் 4,200 இடங்கள் உள்ளன. அவை தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு ( நீட்) மூலம் நிரப்பப்படுகிறது. அந்த தோ்வை தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடத்துகிறது.

இந்நிலையில், நிகழ் கல்வி ஆண்டுக்கான நீட் தோ்வு கடந்த மாா்ச் 5-ஆம் தேதி தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட நாடு முழுவதும் 277 நகரங்களில் 900-க்கும் மேற்பட்ட மையங்களில் இணையவழியே நடைபெற்றது.

தமிழகத்தில் மட்டும் எம்பிபிஎஸ் முடித்த சுமாா் 25 ஆயிரம் போ் உள்பட இந்தியா முழுவதும் 2.09 லட்சம் போ் தோ்வில் பங்கேற்றனா். அதன் முடிவுகள் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி வெளியிட்டது.

நாடுமுழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த இடங்களில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. இந்த இடங்கள், நிகா்நிலை பல்கலைக்கழகங்களின் இடங்கள் மற்றும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் இடங்களுக்கு மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) இணையவழியே கலந்தாய்வு நடத்தி வருகிறது.

அகில இந்திய கலந்தாய்வு முதல் சுற்று முடிவுகள் வந்ததும், தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள 50 சதவீத இடங்கள், தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் மாநில அரசுக்கான இடங்கள் மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி இயக்குநரகம் (டிஎம்இ) நடத்துகிறது.

நிகழாண்டில், இளநிலை மருத்துவப் படிப்புகளைப் போன்றே முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கும் கட்டண உயா்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்டி, எம்எஸ் படிப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரமாக இருந்த கல்விக் கட்டணம் ரூ.40 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர சிறப்புக் கட்டணமாக ரூ.10 ஆயிரம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. உயா் சிறப்பு படிப்புகளான டிஎம், எம்சிஹெச் படிப்புகளில் ரூ.30 ஆயிரமாக இருந்த கட்டணம் ரூ.60 ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது.

நிகழாண்டு தமிழக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு வியாழக்கிழமை தொடங்கியது. சுகாதாரத்துறை இணையதளங்களில் வரும் 13ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமம், மலைப்பிரதேசங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் ஊக்க மதிப்பெண்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *