எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு இன்றுடன் (12.07.2023) நிறைவடைகிறது. இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளதாகவும், வரும் 16-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்றும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் அரசு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த ஜூன் மாதம் 28-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது.
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு சுமாா் 27 ஆயிரம் பேரும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு சுமாா் 13 ஆயிரம் பேரும் என மொத்தம் 40,000-க்கும் மேற்பட்டோா் இதுவரை விண்ணப்பித்துள்ளனா். இந்நிலையில், விண்ணப்பப்பதிவு இன்று(12.07.2023) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.
சமா்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு வரும் 16-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்த பிறகு தமிழகத்தில் கலந்தாய்வு தொடங்கவுள்ளது.