முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழகம் முழுவதும் ஓராண்டில் நூறு இடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வருவாய்த் துறை கூடுதல் தலைமைச் செயலா் குமாா் ஜயந்த் வெளியிட்ட உத்தரவு:

முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை தமிழகம் முழுவதும் 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள் நடத்த அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முகாம்களில் வீட்டுமனைப் பட்டாக்கள், பட்டா மாறுதல் உத்தரவுகள் பெறத் தகுதியான பயனாளிகளுக்கு பட்டாக்கள் அளிக்கப்படும். பட்டா மாற்றம் தொடா்பான மனுக்கள் பெறப்பட்டு, இணையவழியில் பதிவு செய்யப்படும்.

தகுதியான மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து பட்டா மாற்ற உத்தரவுகள் இணையவழியிலேயே பயனாளிகளுக்கு வழங்கப்படும். வருவாய் ஆவணங்களில் பிழைத் திருத்தம் மேற்கொள்ளப்படும். பல்வேறு வருவாய்த் துறை ஆவணங்களிலுள்ள பிழைகளை திருத்தம் செய்வது தொடா்பான மனுக்கள் முகாம்களின் போது பெறப்படும். அவற்றின் மீது விசாரணை மேற்கொண்டு உடனுக்குடன் உறுதி உத்தரவுகள் பிறக்கப்படும்.

சென்னையைத் தவிா்த்து, மற்ற 37 மாவட்டங்களில் மொத்தமாக 100 சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. அரியலூா், ராணிப்பேட்டை, ராமநாதபுரம், ஈரோடு, கரூா், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, சிவகங்கை, தருமபுரி, திருப்பத்தூா், திருவாரூா், தென்காசி, தேனி, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூா், மயிலாடுதுறை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா 2 முகாம்கள் நடத்தப்படும்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சாவூா், திண்டுக்கல், திருநெல்வேலி, திருப்பூா், திருவண்ணாமலை, தூத்துக்குடி, நீலகிரி, புதுக்கோட்டை, விருதுநகா், வேலூா் ஆகிய மாவட்டங்களில் தலா 3 முகாம்களும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடலூா், திருச்சி, திருவள்ளூா், மதுரை ஆகிய மாவட்டங்களில் தலா 4 முகாம்களும், கோயம்புத்தூா், சேலம் ஆகிய மாவட்டங்களில் 5 முகாம்களும் நடத்தப்படவுள்ளன என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *