சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும், தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் ஏற்பட்டுள்ள வேகமாறுபாடு காரணமாகவும் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் நேற்று சில இடங்களில் இடி, மின்னலுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்தது.
அதேபோல, வரும் 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன், லேசான அல்லது மிதமான மழை பெய்யக் கூடும்.
இன்று தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, அதையொட்டிய குமரிக்கடல், இலங்கை கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.