நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ஆம் தேதி மகளிர் சேமிப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இந்த வகையில் இந்த ஆண்டு மகளிர் சேமிப்பு தினம் சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தில், நேற்று நடைபெற்றது. சீஷா தொண்டு நிறுவனம் மற்றும் இந்திய அஞ்சல் துறை ஆகியவை இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில், சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.

இந்த விழாவில் மெர்வின் அலெக்ஸாண்டர் பேசும்போது, “இந்திய அஞ்சல் துறையில் உள்ள பல்வேறு சேமிப்புத் திட்டங்களில், 20 ஆயிரம் பெண்களை பதிவு செய்யும் முயற்சியை சீஷா தொண்டு நிறுவனம் தொடங்கி உள்ளது. உண்மையிலேயே இது ஒரு வரவேற்த்தக்க அம்சம் ஆகும். இந்திய அளவில் தமிழக அஞ்சல் வட்டம்தான் அதிக சேமிப்புக் கணக்குகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்டதக்கது.

மேலும் இந்திய அஞ்சல் துறை பொதுமக்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் சார்பில் அவசர காலத்தில் பொதுமக்களுக்கு உதவும் வகையில், அஞ்சல் நிலையங்களில் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி அவசர காலங்களில் அஞ்சல் நிலையங்களை தொடர்பு கொண்டால் ஆம்புலன்ஸ் சேவை சம்பந்தப்பட்டவர்களுக்கு கிடைக்கும். முதல் கட்டமாக, தாம்பரம், பரங்கி மலை, அம்பத்தூர், அண்ணா நகர் ஆகிய நான்கு இடங்களில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த திட்டம் தற்போது மேலும் 18 இடங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும் நாட்டிலேயே முதல்முறையாக தி.நகர் அஞ்சல் நிலையத்தில் ஏ.டி.எம் சேவை தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் விரைவில் மயிலாப்பூரில் இரண்டாவது ஏ.டி.எம் திறக்கப்படவுள்ளது. அதுமட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள அனைத்து அஞ்சலகங்களும் கணினிமயமாக்கப்பட்டு, ஒருங்கிணைந்த வங்கிச் சேவை “கோர் பேங்கிங் வசதிக்கு மாற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு மெர்வின் அலெக்ஸாண்டர் பேசினார்.

English Summary : A new saving plan is announced by Chennai postal chief Mervin Alexander for women.