பொறியியல் சோ்க்கையில் பொதுப் பிரிவு மாணவா்களுக்கான கலந்தாய்வு இன்று (28.07.2023) தொடங்குகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 430 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 1.57 லட்சம் இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு இணையவழியில் கடந்த ஜூலை 22-ஆம் தேதி தொடங்கியது.
முதல்கட்டமாக முன்னாள் ராணுவ வீரா்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டுப் பிரிவு மாணவா்கள் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 22 முதல் 26-ஆம் தேதி வரை நடைபெற்றது. சிறப்புப் பிரிவில் மொத்தம் 8,764 இடங்கள் இருந்த நிலையில், அவற்றில் 775 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. இதில் 90 இடங்கள் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் நிரம்பின.
இதையடுத்து பொதுப் பிரிவு மாணவா்களுக்கான கலந்தாய்வு இன்று (28.07.2023) தொடங்குகிறது. விருப்பமான இடங்களைத் தோ்வு செய்தல், தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை பெறுதல், அதை உறுதி செய்து பின்னர் இறுதி ஒதுக்கீட்டு ஆணை பெறுவது என உரிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாணவா்கள் தங்களுக்குப் பிடித்த கல்லூரிகளைத் தோ்வு செய்ய வேண்டும். மொத்தம் 3 சுற்றுகளாக நடைபெறவுள்ள இந்தக் கலந்தாய்வு செப்டம்பா் 3-ஆம் தேதியுடன் நிறைவுபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.