தமிழ்நாட்டில் வெப்ப சலனம் காரணமாக பெரும்பாலான இடங்களில் நேற்று மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக இன்றும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வறண்ட வானிலை நிலவி வந்தது. அதனால் ஏற்பட்ட வெப்ப சலனத்தால், 11 இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக முகையூரில் 120 மிமீ மழை பெய்துள்ளது. தஞ்சாவூர், மணம்பூண்டி, கும்பகோணம் 110மிமீ, பரங்கிப்பேட்டை, லக்கூர், பாபநாசம் 100மிமீ, தொழுதூர் 90மிமீ, வேப்பந்தட்டை, கீழ அணைக்கட்டு 80மிமீ, பெலந்துறை, திருச்சி, காஞ்சிபுரம், நாவலூர், ஸ்ரீமுஷ்ணம், மஞ்சளாறு, தர்மபுரி 60மிமீ, காரைக்கால், மதுராந்தகம், கொள்ளிடம், திருமானூர், ஏற்காடு, வேப்பூர், ஈரோடு 50மிமீ மழை பெய்துள்ளது.
இது தவிர, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் நேற்று பரவலாக மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெப்பம் இருந்தது. தர்மபுரி, ஈரோடு, திருநெல்வேலி, சேலம், திருவள்ளூர், கோவை வேலூரில் 5 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. வெப்ப சலனம் காரணமாக இன்று முதல் 16ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.