சுற்றுலாத் துறையில் தமிழகத்தை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்ட ‘தமிழ்நாடு சுற்றுலா கொள்கை’யை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
சுற்றுலாத் துறை, வேலைவாய்ப்பு அளிப்பதுடன், அன்னியச் செலாவணியை ஈட்டுவதில் முக்கிய பங்காற்றுகிறது. தமிழகத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
தனியார் பங்களிப்பில் சென்னை புறநகரில் 100 ஏக்கரில், அமெரிக்காவில் உள்ள டிஸ்னி தீம் பார்க் போன்ற பூங்காவை அமைக்க சுற்றுலாத் துறை முடிவெடுத்துள்ளது. சர்வதேச முக்கியத்துவம் பெறும் வகையில் அமைக்கப்படும் இந்த மிகப்பெரிய பொழுதுபோக்கு பூங்காவில், அட்வென்ச்சர் ரைடிங், குழந்தைகளுக்கான விளையாட்டுகள், பொழுதுபோக்கு அம்சங்கள், செயற்கை நீர்வீழ்ச்சி, சர்வதேச கண்காட்சிகள், விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட உள்ளன.
இது குறித்த தகவல்கள் சுற்றுலா கொள்கையில் இடம்பெற்றுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் இத்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.