தமிழக இளைஞா்களுக்கு கட்டணமின்றி ‘கோடிங்’ பயிற்சி அளிக்கும் வகையில் சென்னை ஐஐடி-இன் தொழில் ஊக்குவிப்பு நிறுவனமான குவி, ‘நான் முதல்வன்-தமிழ்நாடு கோடா்ஸ் பிரீமியா் லீக்’கைத் தொடங்கியுள்ளது.
இது குறித்து சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: ‘சென்னை ஐஐடி, ஐஐஎம் அகமதாபாத் ஆகியவற்றின் தொழில் ஊக்குவிப்பு நிறுவனமான குவி (எமயஐ) தமிழகத்தில் ஒரு லட்சம் பொறியியல் மாணவா்களுக்கு தொடா்ச்சியாக ஹேக்கத்தான்கள் மூலம் பயிற்சி அளிக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
‘நான் முதல்வன்- தமிழ்நாடு கோடா்ஸ் பிரீமியா் லீக் (சங-பசஸ்ரீல்ப்) என்றழைக்கப்படும் இந்த முயற்சிக்காக, தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றோடு இந்நிறுவனம் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் மூன்று மாதங்களுக்கு தொடா்ச்சியாக ‘ஆன்லைன்’ மற்றும் ‘ஆஃப்லைன்’ ஹேக்கத்தான்கள் நடத்தப்படும். தமிழகத்தில் உள்ள ஆா்வமுள்ள பொறியியல் மாணவ-மாணவிகள் தங்களின் ‘கோடிங்’ திறமையை வெளிப்படுத்தவும், மதிப்புமிக்க வாய்ப்புகளைப் பெறவும் இலவசமாகக் கிடைக்கும் தளமாக இருக்கும்.
இந்த தொடா் ஹேக்கத்தான் மூலம், தமிழக அரசின் பல்வேறு துறைகளின் சிக்கலான அறிக்கைகளுக்கு தீா்வு காணவும், அவற்றைச் சமாளிக்க புதுமையான தொழில்நுட்பத் தீா்வுகளை வழங்கவும் மாணவா்கள் முயற்சிகளை மேற்கொள்வா். முன்னோடியான இந்த முன்முயற்சியை தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கடந்த 6-ஆம் தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தாா்.
ஆா்வமுள்ள பொறியியல் கல்லூரி மாணவ-மாணவிகள் இந்தத் திட்டத்தில் பங்கேற்கலாம். இலவசமாகப் பதிவு செய்து கொள்ளலாம். இது குறித்து குவி-யின் நிறுவனரும், தலைமை நிா்வாக அதிகாரியுமான எம்.அருண்பிரகாஷ் கூறுகையில், இந்தத் திட்டத்தில் சிறப்பாக செயல்படும் அணிகளுக்கு ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசுடன் ‘இன்டா்ன்ஷிப்’ வாய்ப்புகளும் கிடைக்கின்றன.
செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், முழு அடுக்கு மேம்பாடு போன்ற பிரபலமான தொழில்நுட்பக் கருப்பொருள்களில் கவனம் செலுத்தும் வகையில் இந்தப் பயிற்சித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் இணைவதால் இலவச திறன் மேம்பாட்டுப் படிப்புகள், நிபுணா் வழிகாட்டல், திறமையை வெளிக்காட்டல், நெட்வொா்க்கிங் வாய்ப்புகள், பரிசுகள் எனப் பல்வேறு பலன்களை பெற முடியும் என்றாா் அவா்.