தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அக். 31, நவ.1 ஆகிய தேதிகளில் ஒருசில இடங்களிலும், 2, 3 தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று, தென்காசி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 3-ம் தேதி குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.