வாகன வரி உயர்வை நவ.10-ம் தேதிக்குள் அமல்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து துறை சார்ந்த அதிகாரிகள் கூறியதாவது:
ரூ.1 லட்சம் வரையிலான இருசக்கர வாகனங்களுக்கு 10 சதவீதம் எனவும், ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்களுக்கு 12 சதவீதமாகவும் வாழ்நாள் வரி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுவரை இருசக்கர வாகனத்தின் மொத்த விலையில் 8 சதவீதம் வாழ்நாள் வரியாக விதிக்கப்பட்டிருந்தது.
கார்களை பொறுத்தவரை ரூ.10 லட்சம் வரையிலான வாகனங்களுக்கு 10 சதவீதமும், ரூ.10லட்சத்துக்கு அதிகமான விலைக்கு வாங்கப்படும் வாகனங்களுக்கு 15 சதவீதமும் வரி வசூலிக்கப்படுகிறது.
இதை மாற்றியமைத்து ரூ.5 லட்சம் வரையிலான கார்களுக்கு 12 சதவீதமும், ரூ.5 முதல் ரூ.10 லட்சம் வரையிலான கார்களுக்கு 13 சதவீதமும், ரூ.10 முதல் ரூ.20 லட்சம் வரையிலான கார்களுக்கு 18 சதவீதமும், ரூ.20 லட்சத்துக்கு அதிகமான கார்களுக்கு 20 சதவீதமும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வாகன வரி உயர்வு மசோதாவுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. வரும் 10-ம் தேதிக்குள் மசோதாவில் கையெழுத்து பெற்று அமல்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இது தொடர்பாக துறைசார் அலுவலர்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என அவர்கள் தெரிவித்தனர்.