தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கான துப்பாக்கி சுடும் மையம் ஆவடி அருகே கடந்த பல வருடங்களாக செயல்பட்டு வந்தது. தற்போது இந்த மையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் தற்காலிக துப்பாக்கி சுடும் மையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் மாணவர்களின் சார்பில் எழுந்தன. இதன்படி சென்னை நேரு விளையாட்டரங்கில் தற்காலிக துப்பாக்கி சுடும் மையம் ஒன்று அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த மையத்தை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் ஏ.சுந்தரராஜ் திறந்துவைத்தார். பின்னர் மாணவ, மாணவிகள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவதையும் அவர் பார்வையிட்டார்.

மேலும் விளையாட்டுத்துறை சார்பில் கோடை விளையாட்டு பயிற்சி வகுப்புகளையும் அமைச்சர் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சுந்தர்ராஜ் பேசியபோது, ‘‘கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வரும் பெற்றோருக்கு மத்தியில் உடல் ஆரோக்கியத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து, விளையாட்டு பயிற்சியில் சேர்க்க பெற்றோர்கள் வருவது தற்போது அதிகரித்துள்ளது. தற்போது தொடங்கப்பட்டுள்ள கோடை வகுப்புகளில் தடகளம், கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட் உள்ளிட்ட 14 வகை விளையாட்டுகளுக்கு பயிற்சியளிக்கப்பட உள்ளது. இதை மாணவ மாணவிகளும், பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

விளையாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலர் ஹேமந்த் குமார் சின்ஹா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் சம்பு கல்லலிக்கர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

English Summary : Rifle Shooting training in chennai is now conducted in Nerhu stadium.