சமீபத்தில் மறைந்த புரட்சி எழுத்தாளர் ஜெயகாந்தனின் புகைப்படக் கண்காட்சி ஒன்றை இந்திய, ரஷிய கலாசார நட்புறவு மையம் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி தொடங்கிய இந்த கண்காட்சி இன்றுடன் நிறைவு பெற இருப்பதாக இந்திய, ரஷிய கலாசார நட்புறவு மையத்தின் பொதுச்செயலாளர் தங்கப்பன் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட ஜெயகாந்தன், ரஷ்ய அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் ஆகியோர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
இந்த கண்காட்சியை நீதிபதிகள் கே.என்.பாஷா, நாகமுத்து, காவல்துறை முன்னாள் அதிகாரி திலகவதி, நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் உள்பட பலர் பார்வையிட்டனர். மேலும் ஜெயகாந்தனின் 50 ஆண்டுகால நண்பரும் இசைஞானியுமான இளையராஜா அவர்களும் இந்த கண்காட்சியை காண நேரில் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று கடைசி நாள் என்பதால் கண்காட்சியை காண அதிகளவிலான பொதுமக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.