சென்னை அண்ணா சாலையில் உள்ள பி.ஆர்.ஆர். அண்டு சன்ஸ் கட்டடத்தின் குறிப்பிட்ட பகுதி மிகவும் பலவீனமாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டிருப்பதால் அந்த பகுதியை பத்து நாட்களுக்கு இடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள பி.ஆர்.ஆர். அண்டு சன்ஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான கட்டடம் மிகவும் பலவீனமாக இருப்பதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய அபாயம் கருதி அதை இடிப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால் கட்டடத்தை இடிக்க மாநகராட்சி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி பி.ஆர்.ஆர். அண்டு சன்ஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்ற நீதிபதி, அந்தக் கட்டடம் வலுவிழந்த கட்டடம் என , கட்டட நிபுணர்கள் சான்றளித்துள்ளதால் மாநகராட்சி எடுத்த முடிவு சரியானது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து பி.ஆர்.ஆர். அண்டு சன்ஸ் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு நேற்று நீதிபதிகள் சதீஷ் கே.அக்னிஹோத்ரி, எம்.வேணுகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பின்னர் தீர்ப்பு அளித்த நீதிபதிகள் “உறுதியில்லாத கட்டடத்தினால் பாதிப்புகள் ஏற்படலாம் என கட்டட நிபுணர்கள் உறுதி செய்துள்ளதால் ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பு சரிதான் என்றும், இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாகவும் தீர்ப்பளித்தனர். மேலும் பலவீனமாக உள்ள பகுதியை கட்டட நிர்வாகத்தினர் 10 நாள்களுக்குள் இடிக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்யத் தவறினால், மாநகராட்சி அதிகாரிகள் சட்ட விதிகளின் படி அதை மேற்கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்