சென்னையில் ஒரே வழித்தடத்தில் இயங்கி வரும் பேருந்துகள் ஒரே எண் கொண்டவையாக மாற்றும் திட்டத்தின் படி மேலும் 50 வழித்தடங்களில் பேருந்து எண்கள் விரைவில் மாற்றப்படும் என மாநகர போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

சென்னை நகரப் பேருந்துகளின் வழித்தட எண்களை பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் ஒரே வழித்தடங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கு ஒரே எண்கள் என்கிற பிராண்டிங் தி ரூட்ஸ் என்ற புதிய திட்டத்தை மாநகர போக்குவரத்துத் துறை சமீபத்தில் அமல்படுத்தியது . பெங்களூரு, மும்பை ஆகிய மாநகரங்களில் நடைமுறையில் உள்ள இந்த திட்டம்,  சென்னை மக்களின் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த திட்டத்தின் படி கடந்த பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி முதல்  வடபழனி, திருவொற்றியூர், எண்ணூர், கோயம்பேடு, பிராட்வே உள்பட 50 வழித்தடங்களில் பேருந்துகளின் எண்கள் மாற்றியமைக்கப்பட்டன. இதையடுத்து தற்போது மேலும் 50 வழித்தடங்களில் இது விரிவுபடுத்தப்படவுள்ளது.

இதுபற்றி போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஏற்கனவே 50 வழித்தடங்களில் ஒரே வழித்தடத்தில் ஒரே எண் பேருந்துகள் இயக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கட்டமாக மேலும் 50 வழித்தடங்களில் பேருந்து எண்களை மாற்றி இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். முழுமையான ஆய்வுக்கு பின்னர், பேருந்து எண்கள் மாற்றப்படும். பேருந்துகளின் எண்களை மாற்றியமைக்கும்போது சம்பந்தப்பட்ட பணிமனை அதிகாரிகள் மூலம் அறிவிக்கப்படும்” என்று கூறினார்.

 

English Summary: Chennai MTC going to change another 50 Bus Route Numbers.