சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு முக்கிய ஆதாரமாக விளங்கி வரும் வீராணம் ஏரி இன்னும் மூன்று  நாட்களில் முழு கொள்ளளவை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த ஆண்டு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இது குறித்து குடிநீர் வாரியம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில், “கடந்த மாதம் 24-ம் தேதி வீராணம் ஏரியின் கொள்ளளவு 556 மில்லியன் கன அடியாக இருந்தது. சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையைக் கருத்தில்கொண்டு, மேட்டூர் அணையில் இருந்து 25-ம் தேதி 6 ஆயிரம் கன அடி வீதம் வீராணம் ஏரிக்கு நீர் திறந்துவிடப்பட்டது. இந்த நீர் காவிரி ஆற்றின் வழியாக 27-ம் தேதி கல்லணைக்கு வந்தடைந்தது.

அங்கிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு நீர் திறந்துவிடப் பட்டது. வீராணம் ஏரியின் முழு கொள்ளளவு 1,465 மில்லியன் கன அடி. இதில் நேற்றைய நிலவரப்படி 1,379.95 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது. மேலும் 3 நாட்களுக்குள் வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டும்.

இதன்மூலம் சென்னை மாநகருக்கு ஜூலை மாதம் வரை நாளொன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தங்கு தடையின்றி வழங்க முடியும். இந்த ஆண்டு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

English Summary: Veeranam Lake is going to reach its full capacity. Chennai Peoples Drinking Water Problem to solved for this summer.