நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வில் சென்னை மாநகராட்சியின் பள்ளிகள் 85.3% தேர்ச்சியை பெற்றுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில், ‘சென்னை மாநகராட்சிக்கு சொந்தமாக சென்னையில் இயங்கி வரும் 32 மேல்நிலைப்பள்ளிகல் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பிளஸ்2 பொதுத்தேர்வில் மொத்தம் 6.202 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதியதாகவும் அவர்களில் 2,319 பேர் மாணவர்கள் என்றும் 3,883 பேர் மாணவிகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் 1,778 மாணவர்களும், 3,512 மாணவிகளும் என மொத்தம் 5,290 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 85.3 ஆகும்.
மாநகராட்சி பள்ளிகளை பொறுத்தவரையில், சைதாப்பேட்டையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.சவுமியா 1,169 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
மார்க்கெட் தெருவில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜி.சர்மிளா 1,156 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கே.திவ்யா 1,155 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
மேலும் 43 மாணவ, மாணவிகள் 200க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளதாகவும் 49 பேர் 1,100க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளதாகவும், 298 பேர் 1,000க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் சென்னை மாநகராட்சியின் 2 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளதும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
English Summary: Chennai Corporation Schools +2 Exam Results Pass Percentage.