டாக்டர்களுக்கு அடுத்தபடியாக பொதுமக்களின் உயிரை காப்பாற்றுவதில் பெரும்பங்கு வகிப்பவர்கள் செவிலியர்கள் என்று கூறப்படும் நர்ஸ்கள். இவர்களின் சேவையை போற்றும் வகையில் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 12ஆம் தேதி ‘சர்வதேச செவிலியர் தினம்’ கொண்டாடப்படுவதுண்டு. இந்நிலையில் இன்று உலகம் முழுவதும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னையில் உள்ள அரசு பொது மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில், சர்வதேச செவிலியர் தின விழா நேற்று மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த விழாவை முன்னிட்டு “அவசர அறுவை சிகிச்சையில் உயிர் காத்தல்- செவிலியர்களின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் ஒன்று நேற்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் அரசுமருத்துவமனையின் பொது அறுவைச் சிகிச்சைத் துறை, இரைப்பை, குடலியல் அறுவைச் சிகிச்சைத் துறை, எலும்பு முறிவு முடநீக்கியல் துறை, மூளை நரம்பியல் அறுவைச் சிகிச்சைத் துறை, மகப்பேறு மருத்துவம் உள்பட பல்வேறு பிரிவுகளின் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

அவசர சிகிச்சையில் எந்த நோயாளிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும், மூளையில் அடிபட்டவர்களைக் கண்காணித்தல், பேறு காலத்தில் அவசரச் சிகிச்சையில் குழந்தை பிறந்தவுடன் தாய், சேயை கவனித்துக் கொள்வது, ரத்த வாந்தி, ரத்தப்போக்கு ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிப்பது போன்றவை குறித்து செவிலியர்களுக்கு அவர்கள் விரிவான விளக்கம் அளித்தனர்.

முன்னதாக திராவகம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்த ஷாலினி, வெங்கடேஷ், வினோதினி ஆகியோர் தங்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்தனர். இந்த விழாவில் மருத்துவமனையின் இரைப்பை, குடல் அறுவைச் சிகிச்சைத் துறை பேராசிரியர் டாக்டர் எஸ்.எம்.சந்திரமோகன், காது, மூக்கு, தொண்டைப் பிரிவு பேராசிரியர் டாக்டர் முத்துக்குமரன், செவிலியர்கள் சங்கத் தலைவி காந்திமதி உள்பட பல்வேறு துறைகளின் மருத்துவ நிபுணர்கள், செவிலியர்கள் கலந்துகொண்டனர்.

English Summary: International Nurses Day is Celebrated in Chennai Government Hospital.