கோடை விடுமுறை முடிந்து இன்னும் சில நாட்களில் பள்ளி தொடங்க உள்ளதால் சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளின் பள்ளி வாகனங்களையும் ஆய்வு செய்ய ஆர்.டி.ஒ அலுவலங்கள் முடிவு செய்துள்ளது.
இதையடுத்து விருகம்பாக்கம் ஆர்.டி.ஓ. எல்லைக்கு உட்பட்ட பகுதிகளான வடபழனி, விருகம்பாக்கம், போரூர், சின்மயா நகர், சூளைமேடு, ராமாபுரம் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் 36 தனியார் பள்ளிகளுக்கு சொந்தமான பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நேற்று கே.கே.நகரில் நடைபெற்றது. இந்த ஆய்வை விருகம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் ரவிச்சந்திரன் நடத்தினார்.
பள்ளி வாகனங்களில் அவசர கால வழி, மருத்துவ முதல் உதவி பெட்டி, பாதுகாப்பு ஜன்னல்கள், தீயணைப்பு கருவிகள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வசதிகள் குறித்தும், வாகனங்களின் டயர்கள் மற்றும் சீட்டுகளின் தன்மைகள் குறித்தும் அவ்ர் ஆய்வு செய்தார். ஒருசில வாகனங்களில் இருந்த குறைகள் சுட்டிக்காட்டப்பட்டதாகவும், அந்த குறைகளை வரும் 27ஆம் தேதிக்குள் சரி செய்து மீண்டும் ஒருமுறை அந்த வாகனங்கள் சோதனைக்காக கொண்டு வரப்பட வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.
மேலும் அளவுக்கு அதிகமாக மாணவர்களை ஏற்றிச் செல்லும் பள்ளி வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றும் தொடர்ந்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் அந்த வாகனம் சிறை பிடிக்கப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படும் என்றும் பள்ளி வாகனங்களை ஓட்டும் ஓட்டுனர்களிடம் ஆர்.டிஓ கூறியுள்ளார். இந்த ஆய்வின்போது அவருடன் விருகம்பாக்கம் வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் கிரிராஜன், மாதவன், பூங்குழலி மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்.
English Summary : Since summer holidays about to over K.K.Nagar R.T.O office decided to inspect school vehicles.