சென்னையில் மெட்ரோ ரயில் பாதையின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென மெட்ரோ பணியை நிறுத்திவிட்டு நாடு திரும்பிய ரஷிய நிறுவனம் மீண்டும் பணியை தொடங்க விரைவில் சென்னை வரவுள்ளதாக ரஷிய நாட்டு துணைத்தூதர் இன்று அறிவித்துள்ளார்.
சென்னையில் நடந்து வரும் மெட்ரோ ரெயில் சேவைக்கான பணியில், ஓமந்தூரார் அரசினர் தோட்டம் முதல் சைதாப்பேட்டை வரை 9 கிலோ மீட்டர் தூரத்துக்கான சுரங்கப்பாதை பணி ரஷியா நாட்டைச் சேர்ந்த மாஸ்மெட்ரோ நிறுவனமும், கேமன் இந்தியா நிறுவனமும் இணைந்து செய்து வந்தன. இந்நிலையில் இந்த இரு நிறுவனங்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 1-ந்தேதி மாஸ்மெட்ரோ நிறுவனத்தினர் பணியை பாதியில் நிறுத்திவிட்டு ரஷியா சென்றுவிட்டனர்.
இதனால் இந்தவேலைக்கு மணல், ஜல்லி, கற்கள் மற்றும் இரும்பு கம்பிகள் சப்ளை செய்த ஒப்பந்தக்காரர்களுக்கான தொகையை ரஷ்ய நிறுவனம் அளிக்கவில்லை என்றும், அந்த நிறுவனத்திடம் இருந்து தங்களுக்கு வரவேண்டிய தொகையை பெற்றுத்தருமாறும் ஒப்பந்தக்காரர்கள் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன நிர்வாக இயக்குனரை சந்தித்து முறையிட்டனர். இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள ரஷிய நாட்டு துணைத்தூதர் கோட்டோவ்வை, ஒப்பந்தக்காரர் நேற்று நேரில் சந்தித்து தங்கள் குறைகளை தெரிவித்தனர்.
ஒப்பந்தகாரர்களுக்கு பதிலளித்த ரஷ்ய நாட்டின் துணை தூதர் ‘வரும் 25-ந்தேதி ரஷிய நாட்டு மாஸ்மெட்ரோ நிறுவனத்தினர் மீண்டும் சென்னை திரும்பி வந்து பணியை தொடங்க உள்ளனதாகவும், அதனால் ஒப்பந்தகாரர்களுக்கு வரவேண்டிய தொகைகளையும் மாஸ்மெட்ரோ நிறுவனத்தினர் உறுதியாக அளித்துவிடுவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். இதனால் ஒப்பந்தகாரர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
English Summary: Russian Company come back to Chennai to finish the remaining work of Chennai Metro Rail Project.