இந்தியாவில் உள்ள முக்கிய துறைமுகங்களில் ஒன்றான சென்னை துறைமுகத்தில் கப்பல்கள் மூலம் ஏராளமான சரக்குகள் வருகின்றன. அவை அனைத்தும் கண்டெய்னர்களில் அடைக்கப்பட்டு லாரிகள் மூலம் சென்னை மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த பணியில் 1000க்கும் மேற்பட்ட லாரிகள் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் இந்த கண்டெய்னர் லாரிகளை ஓட்டும் டிரைவர்கள் நேற்று இரவு முதல் வேலைநிறுத்தம் செய்துள்ளதால் துறைமுகத்தின் வெளியே சுமார் 15 கி.மீ தூரத்திற்கு கண்டெய்னர் லாரிகள் அணிவகுத்து நிற்கின்றன.

துறைமுக நுழைவு வாயிலில் அனுமதி சீட்டு வழங்கும் சுங்கத்துறை அதிகாரிகள் அனுமதி சீட்டை கொடுக்க காலதாமதம் செய்வதாகவும் இதனால் தங்களுடைய பொன்னான நேரம் அதிகளவில் விரயமானதாகவும் புகார் தெரிவித்துள்ள கண்டெய்னர் லாரி டிரைவர்கள் கால தாமதமின்றி விரைவாக அனுமதி சீட்டு வழங்க வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில்ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

நேற்று இரவு 10 மணி முதல் நடந்து வரும் இந்த வேலைநிறுத்தத்தினால் துறைமுகத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் தேக்கம் அடைந்து கிடப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. நீண்ட வரிசையில் நிற்கும் லாரிகள் காசிமேடு, எண்ணூர் எக்ஸ்பிரஸ் ரோடு, திருவொற்றியூர், மஞ்சப் பாக்கம், மாதவரம் வரை நீண்ட ‘கியூ’ வரிசையில் நிற்பதாகவும், இதனால் துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. துறைமுக அதிகாரிகள் கண்டெய்னர் லாரி ஓட்டுனர்களிடம் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவார்கள் என கூறப்படுகிறது.

English Summary: Container Lorries goes strike on Chennai Port.