சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் ஜூன் 27 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தின் நடத்தை நெறிமுறைகள் சென்னை நகர் முழுவதிற்கும் பொருந்துமா? அல்லது ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிக்கு மட்டும் பொருந்துமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழக தேர்தல் ஆணையம் நேற்று விரிவான விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அந்த விளக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான மே 26 ஆம் தேதியில் இருந்து, ஆர்.கே.நகர் தொகுதி இடம்பெற்றுள்ள சென்னை மாவட்டத்தில் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. ஆனால், இந்த நடத்தை நெறிமுறைகளில் சில அம்சங்களில் இப்போது திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அதன்படி, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வரும் திட்டங்களை அமல்படுத்துவது, இயற்கைப் பேரிடர், வறட்சி, வெள்ளம் ஆகியவை தொடர்பான நிவாரணம் வழங்குவது, குடிநீர், ஆழ்துளைக் கிணறு தோண்டுவது ஆகியவற்றில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் சென்னை மாவட்டம் முழுமைக்கும் பொருந்தாது. சம்பந்தப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதிக்கு மட்டுமே பொருந்தும்.
மேலும் திட்டங்கள் தொடர்பான விதிகளைத் தவிர்த்து, அமைச்சர்களின் பயணம், வாகனப் பிரசாரம், விளம்பரம், அரசு விருந்தினர் மாளிகையைப் பயன்படுத்துதல், அதிகாரிகள் பணியிட மாற்றம் உள்ளிட்டவற்றுக்கான கட்டுப்பாடுகள் ஆர்.கே.நகர் தொகுதி அடங்கிய சென்னை மாவட்டம் முழுமைக்கும் பொருந்தும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
English Summary : Will Terms of conduct of the Election Commission for R.K.Nagar by-election can be applied for the whole Chennai ?