சென்னை காவல்துறையினர்களின் குழந்தைகளுக்கு நடைபெற்ற கோடை விடுமுறை பயிற்சி முகாம் நிறைவு பெற்றது. சமீபத்தில் நடந்த இந்த முகாமின் நிறைவு விழாவில் மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சிகளை நடத்தி அனைவரையும் மகிழ்வித்தனர்.

இந்த கோடை விடுமுறை முகாமில் சுமார் 1,200 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை கமிஷனர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:

கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் கடந்த மே 4-ந்தேதி முதல் ஒரு மாத காலத்திற்கு, சென்னை நகர போலீசாரின் குடும்பத்து பிள்ளைகளுக்கு கோடைகால பயிற்சி முகாம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த கோடைகால பயிற்சி முகாம் வெற்றகரமாக நடந்திட தலைமையக கூடுதல் கமிஷனர் திருஞானம், சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனர் ஸ்ரீதர், ஆயுதப்படை துணை கமிஷனர் சவுந்திரராஜன், உதவி கமிஷனர்கள் மோகன்ராஜ், அழகு ஆகியோர் சிறப்பாக ஏற்பாடுகள் செய்து இருந்தனர். சென்னை நகரில் 21 ஆயிரம் போலீசார் பணியாற்றுகிறார்கள். அவர்களது குடும்பத்து பிள்ளைகள் எல்.கே.ஜி படிப்பவர்கள் தொடங்கி கல்லூரி படிப்பவர்கள் வரை சுமார் 1200 மாணவ-மாணவிகள் கோடைகால பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு நீச்சல், கராத்தே, கால்பந்து, துப்பாக்கியால் சுடுதல், யோகா, கிரிக்கெட், கணினி, டென்னிஸ், இசை, சிலம்பம், கைப்பந்து, குதிரையேற்றம் ஆகிய பயிற்சிகள் கொடுக்கப்பட்டன.

இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ- மாணவிகள் சென்னை துறைமுகம், கிண்டி குழந்தைகள் பூங்கா, இந்தியன் ஷூ கம்பெனி, சோழவரம் செட்டிநாடு குதிரை பண்ணை போன்ற இடங்களுக்கு சுற்றுலாவும் அழைத்து செல்லப்பட்டனர். பயிற்சி முகாமின் நிறைவு விழாவும் சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடத்தப்பட்டது. அந்த விழாவில் பயிற்சியில் கற்ற கலைகளை மாணவ- மாணவிகள் செய்து காட்டி அசத்தினார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary : Summer holiday camp for police children’s has now come to an end. Children’s showed their skills learned in training at the end of the ceremony.