சென்னையில் இன்றும் நாளையும் ரஷ்ய கல்விக் கண்காட்சி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ரஷிய கலாசார மையத்தில் நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியில் ரஷியாவைச் சேர்ந்த 7 முன்னணி பொறியியல் மற்றும் மருத்துவப் பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
இது குறித்து தென்னிந்தியாவுக்கான ரஷிய தூதரக அதிகாரி மிக்கேல் கோர்படோவ் சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சென்னையில் உள்ள ரஷிய கலாசார மையம் சார்பில் 16-ஆவது முறையாக இந்த கல்விக் கண்காட்சி நடத்தப்படுகிறது. ரஷியாவில் உள்ள 650 பொறியியல், 63 மருத்துவப் பல்கலைக்கழகங்கள் மிகக் குறைந்த கட்டணத்தில் வழங்க இருக்கும் உயர் கல்வி குறித்த விழிப்புணர்வு இந்தக் கண்காட்சியில் ஏற்படுத்தப்படும்.
அது தவிர ஏழு முன்னணி பொறியியல், மருத்துவ பல்கலைக்கழகங்கள் கண்காட்சியில் பங்கேற்று, மாணவர் சேர்க்கையையும் நடத்த உள்ளன. கண்காட்சிக்கு அனுமதி இலவசம். பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களுடன் கண்காட்சிக்கு வரும் மாணவ, மாணவிகள் அங்கேயே பட்டப் படிப்புக்கான நேரடி சேர்க்கையைப் பெற முடியும். சென்னையை தொடர்ந்து, ஜூன் 9ஆம் தேதி மதுரையிலும் இந்த கண்காட்சி நடைபெறும் என்றும் ரஷ்ய தூதரக அதிகாரி கூறியுள்ளார்.
இந்த கண்காட்சி குறித்து மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள 044 – 24988215, 9282221221 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என ரஷிய துணைத் தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary : Russian Education Exhibition will be held for 2 days in Chennai on June 9th.