Tablets. A medical preparation in the form of capsules
கோடை விடுமுறை முடிந்து கடந்த திங்கட்கிழமை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி மாணவர்களுக்கு ரத்தசோகை ஏற்படாமல் தடுப்பது எப்படி? என்பது குறித்து சுமார் 2 லட்சம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: ”வளர் இளம் பருவ மாணவ-மாணவிகளுக்கு ரத்தசோகை ஏற்படாமல் தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிப்பவர்களுக்கு போலிக் அமிலம் அடங்கிய இரும்புச்சத்து மாத்திரைகள் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று வழங்கப்பட்டு வருகின்றன. இதனால், மாணவர்களின் நினைவுத்திறனும், சிந்திக்கும் ஆற்றலும் கற்றல் திறனும் வளரும். அவர்களின் உடல்நலன் மேம்படும்.

மேலும், ஆரம்ப சுகாதார மையங்கள் 6 மாதங்களுக்கு ஒருமுறை மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளையும் வழங்கி வருகின்றன. இந்த திட்டத்தின் மூலம் 16,385 பள்ளிகளைச் சேர்ந்த 66 லட்சத்து 22 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.

மாணவர்களுக்கு ரத்தசோகை ஏற்படாமல் தடுக்கும் முறைகள் குறித்து யுனிசெப் நிறுவன நிதி உதவியுடன் கடந்த ஆண்டு முதல்கட்டமாக 15,642 ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர்களுக்கும் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த ஆண்டும் யுனிசெப் நிதி உதவியுடன் தமிழகம் முழுவதும் 10,465 பள்ளிகளைச் சேர்ந்த ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 360 ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது”

இவ்வாறு வி.சி.ராமேஸ்வரமுருகன் தனது செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

English Summary : More than 2 lakh teachers are trained to prevent anemia from students by providing tablets which contains folic acid to improve iron in body.