கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை ஐ.ஐ.டி.யின் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் மீது ஐஐடி நிர்வாகம் தடை விதித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது அந்த தடை நீக்கப்பட்டதாக ஐ.ஐ.டி. நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை ஐ.ஐ.டி. மாணவர்களால் இயங்கி வந்த அம்பேத்கர், பெரியார் வாசகர் வட்டம் என்ற அமைப்பை சேர்ந்த மாணவர்கள் பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய அரசின் கொள்கைகளையும், விமர்சித்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்களை அடுத்து அதன் அங்கீகாரத்தை ரத்து செய்வதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை ஐஐடி நிர்வாகம் அறிவித்தது.

ஐஐடி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை கண்டித்து பல்வேறு மாணவர் அமைப்பினர்கள், அரசியல் கட்சிகள் ஆகியவை நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையமும் இந்த விஷயத்தில் தலையிட்டு, ஐ.ஐ.டி.யிடம் விளக்கம் கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் ஐ.ஐ.டி நிர்வாகத்துடன் மாணவர் அமைப்பினர் நேற்று பேசுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அம்பேத்கார்-பெரியார் வாசகர் வட்டத்திற்கான தடை நீக்கப்பட்டது. மேலும், அம்பேத்கார்-பெரியார் வாசகர் வட்டமானது சுயேட்சையான மாணவர் அமைப்பாக இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டது. இந்த அமைப்பின் ஆலோசகராக பேராசிரியர் மிலிந்த் பிராமியை நியமிக்கவும் பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

English Summary : Chennai IIT’s Periyar and Ambedkar study cirle ban has been released by IIT corporation.