நேற்று முன் தினம் சென்னை அருகே காணாமல் போன கடலோர காவல் படைக்குச் சொந்தமான ‘சிஜி 791’ என்ற ‘டார்னியர்’ சிறிய ரக விமானம் புதுச்சேரியில் இருந்து 16 கடல் மைல் தொலைவில் கடலில் விழுந்ததாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது. இருப்பினும் அந்த விமானத்தில் பயணம் செய்த விமானி உள்பட 3 பேர் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கடலோர காவல் படையின் ஏடிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் செய்தியாளரிடம் தெரிவித்தபோது, “கடலோர காவல் படைக்கு சொந்தமான 10 படகுகளில், படகுக்கு 5 பேர் வீதம் 50 கடலோர காவல் படை வீரர்கள் மாயமான 3 பேரையும் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விமானத்துடன் அவர்கள் கடலில் விழுந்திருந்தாலும் அவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்புள்ளது. கடலில் விமானத்தின் பாகங்கள் ஏதாவது தெரிகிறதா என்றும், மனிதர்கள் யாராவது மிதக்கிறார்களா என்றும் தொடர்ந்து தேடி வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

காணாமல் போன விமானத்தை சென்னை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையில் உள்ள ரேடார் கருவிகள் மூலமும் தீவிரமாக தேடப்பட்டு வருவதாகவும், காணாமல் போன விமானம் குறித்து ஏதேனும் தடயம் சிக்கினால் தகவல் அளிக்குமாறு மீனவர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கடலோர காவல்படையின் கிழக்குப் பிராந்திய ஐ.ஜி. சத்திய பிரகாஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

English Summary: Flight belongs to Coast Guard Missing near Chennai merged in Sea. What happen to 3 Passengers in that Flight??