இதுவரை ரோமிங் அழைப்புகளுக்காக கட்டணம் பெற்று வந்த ஏர்செல் நிறுவனம் இன்று முதல் ஆறு மாநிலங்களில் இலவச ரோமிங் இன்கமிங் அழைப்புகள் பெறும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்று முதல் தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருக்கும் ஏர்செல் வாடிக்கையாளர்கள் இந்த 6 மாநிலங்களுக்குள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு வரும் இன்கமிங் அழைப்புகளுக்கு கட்டணம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு தானாகவே கிடைத்து விடும் என்றும் இதற்காக வாடிக்கையாளர்கள் புதியதாக ரீசார்ஜ் செய்யவோ அல்லது எஸ்.எம்.எஸ். அனுப்பவோ வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஏர்செல் வர்த்தகப் பிரிவுத் தலைவர் கே.சங்கர நாராயணன் அவர்கள் கூறியதாவது: “தென்னிந்தியாவில் உள்ள 4 கோடி ஏர்செல் வாடிக்கையாளர்களில் 30 சதவீதம் பேர் ரோமிங் வசதியை பயன்படுத்துகின்றனர். 2010ஆம் ஆண்டில் ஒரு மாதத்துக்கு சராசரியாக ஒரு வாடிக்கையாளர் 346 நிமிடங்கள் பேசியுள்ளார். அதில் 10 நிமிடங்கள் ரோமிங் அழைப்பாகும். 2014-ம் ஆண்டில் ஒரு வாடிக்கையாளர் சராசரியாக 383 நிமிடங்கள் பேசியுள்ளார். அதில் 80 நிமிடங்கள் ரோமிங் அழைப்பாகும். செல்போனில் பேசும் நேரமும், ரோமிங் அழைப்புகள் பேசும் நேரமும் அதிகரித்துள்ளன. குறிப்பாக ஒசூர், பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், திருப்பதி, கோவை, திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய பகுதிகளில் ரோமிங் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது.
ஆனால், இன்னமும் ரோமிங் வாடிக்கையாளர்களில் 40 சதவீதம் பேர் தங்களுக்கு வரும் இன்கமிங் அழைப்புகளை எடுப்பதே இல்லை. ஏனென்றால், இன்கமிங் கால்களுக்கு பொதுவாக ரோமிங்கில் ஒரு நிமிடத்துக்கு 45 பைசா கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ரோமிங் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், பலர் இன்கமிங் அழைப்புகளை எடுப்பதில்லை என்பதால், தென்னிந்தியாவில் ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு இன்கமிங் அழைப்புகள் இன்று முதல் இலவசமாக வழங்கப்படுகின்றன. இது பழைய, புதிய, ப்ரீ-பெய்ட், போஸ்ட்-பெய்ட் என அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்” என்று கூறியுள்ளார்.
English Summary: Aircel announced that the Roaming for Six states has been cancelled.