முன்கூட்டியே திட்டமிடாமல் திடீரென ரயில் பயணம் செய்பவர்களுக்கு வசதியாக ரயில்வே துறை தட்கல் முன்பதிவு முறையை அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த முறையில் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்ய அதிகளவிலான போட்டியிருக்கும். ஒரே நேரத்தில் ஏசி வகுப்புகளுக்கும், ஏசி அல்லாத வகுப்புகளுக்கும் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் முறை இதுவரை இருந்தது.

இந்நிலையில், தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு நேரம் தற்போது மாற்றி அமைக்கபப்ட்டுள்ளது. இதன்படி, காலை 10 மணி முதல் 11 மணி வரையில் ஏசி வகுப்புகளுக்கு முன்பதிவு நடக்கும். காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரையில் ஏசி அல்லாத பிற வகுப்புகளுக்கு முன்பதிவு நடக்கும். மேலும் இதுவரையில் தட்கல் முன்பதிவு டிக்கெட்களை ரத்து செய்தால், எந்த தொகையும் திரும்ப அளிக்கப்படாது. ஆனால் புதிய முறையில் தட்கல் டிக்கெட்டை ரத்து செய்தால் 50 சதவீதம் வரையில் கட்டணத்தை திரும்ப வழங்க ரயில்வே முடிவு செய்துள்ளது.

மேலும் டிக்கெட்டுக்களை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும்போது ஐஆர்சிடிசி இணையதளம் மிகவும் மெதுவாக செயல்படுவதாக புகார் வந்த நிலையில் தற்போது ரயில்வே நிர்வாகம் முன்பதிவுக்குரிய இரண்டு உயர் திறன் சர்வர்களை நிறுவியுள்ளது. இதன்மூலம் இதுவரை நிமிடத்திற்கு 7,200 டிக்கெட்டுகளாக இருந்த முன்பதிவு திறன், தற்போது 14,000 டிக்கெட்டுகளாக அதிகரித்துள்ளது. இத்தகவலை ஐஆர்சிடிசி தலைவரும் நிர்வாக இயக்குனருமான டாக்டர் ஏ.கே. மனோச்சா கூறியுள்ளார்.

தற்போது நாடு முழுவதும் 54 சதவீத டிக்கெட்டுகள் ஆன் லைன் மூலமே முன்பதிவு செய்யப்படுவதாகவும், நாளொன்றுக்கு சராசரியாக 5.5 முதல் 6 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

English Summary: Thatkal Ticket Booking Timings in Trains is Changed: Indian Railway.