எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான ரேண்டம் எண், மருத்துவக் கல்வி இயக்குனர் கீதாலட்சுமி அவர்களால் இன்று வெளியிடப்பட்டது. இதன்படி வரும் ஜூன் 19ஆம் தேதி முதல் கட்ட கவுன்சிலிங் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்ககம் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவக் கல்வி இயக்குனர் கீதாலட்சுமி மேலும் கூறியதாவது, “ஒரே கட் ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்களை வரிசைப்படுத்த ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண், பிறந்த தேதி மூலம் ரேண்டம் எண்ணை தெரிந்து கொள்ளலாம்.

அதுமட்டுமின்றி www.tnhealth.org.in என்ற இணையதளத்திலும் மாணவர்கள் தங்கள் ரேண்டம் எண்ணை அறிந்து கொள்ளலாம். மேலும் பிளஸ் 2 மறுமதிப்பு முடிந்த உடன் தகுதி பட்டியல் வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.

ஜூன் 19ஆம் தேதி முதல் 25ஆம் தேதிக்குள் முதல் கட்ட கவுன்சிலிங் நடத்த மருத்துவ கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளதாகவும், கவுன்சிலிங் தேதிகள் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி நடைபெறும் என்றும் கூறிய கீதாஞ்சலி, மருத்துவ படிப்புக்கான இடங்கள் 2,655 ஆக அதிகரித்துள்ளது என்றும், கடந்தாண்டை விட இந்தாண்டு 100 இடங்கள் கூடுதலாகும் என்றும் இந்த 100 இடங்கள் ஓமந்தூரர் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மூலம் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

English Summary: Random Numbers released for MBBS Counselling. June 18 MBBS Counselling is going to start.