சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவது கிருஷ்ணா நதிநீர். சென்னைக்கு அனுப்பப்பட்டு வந்த இந்த கிருஷ்ணா நீர் நேற்றுடன் நிறுத்தப்பட்டது. கண்டலேறு அணையில் நீர் இருப்பு குறைந்தபட்ச அளவை எட்டியுள்ளதால் சென்னைக்கு செல்லும் கிருஷ்ணா நதிநீர் நிறுத்தப்பட்டதாக ஆந்திர அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையின் குடிநீர் தேவைக்காக கடந்த ஜூன் மாதம் 1ஆம் தேதி கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீர் திறந்துவிடப்பட்டு, ஜூன் 4-ம் தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டையை அடைந்தது. தினசரி 1000 கன அடி வீதம் நீர் திறந்துவிடப் பட்ட இந்த நதிநீர், ஊத்துக்கோட்டையில் ஒரு நாளைக்கு சுமார் 200 கன அடி நீர் வந்துக் கொண்டிருந்தது. தற்போது ஆந்திராவில் நீர் நிறுத்தப்பட்டாலும் மேலும் 3 நாட்களுக்கு ஊத்துக்கோட்டைக்கு நீர் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னைக்கு இதுவரை சுமார் 0.2 டி.எம்.சி நீர் இதனால் கிடைத்துள்ளது.

கண்டலேறு அணையின் கொள்ளளவான 68.03 டி.எம்.சியில் தற்போது 6.39 டி.எம்.சி நீர் மட்டுமே உள்ளது. கண்டலேறு அணையின் நீர்மட்டம் குறைந்தபட்ச அளவை எட்டியுள்ளதால், பம்ப் செய்தால் மட்டுமே அங்கிருந்து தண்ணீரை எடுக்க முடியும். புவி ஈர்ப்பு விசையின் மூலம் கால்வாய் வழியாக நீர் செலுத்தப்படுவதற்கு போதிய அளவு நீர் அணையில் இல்லை. எனவே கிருஷ்ணா நீர் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போது 109.14 கன அடி நீர் மட்டுமே சென்னைக்கு வருகிறது. பூண்டி ஏரியின் நீர் மட்டம் 0.16 டி.எம்.சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary : Since Kadaloor dam water level reached the minimum level, Krishna water was stopped supplying to Chennai says Andhra government.