சாலையில் நடந்து கொண்டே செல்போனில் மெசேஜ் அனுப்புவது, கேம்ஸ் விளையாடுவது போன்றவர்களுக்காக பெல்ஜியம், சீனா ஆகிய நாடுகளில் தனிப்பாதை ஒதுக்கப்பட்டது போன்று சென்னையிலும் ஒதுக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்களை பொதுமக்கள் அதிகளவு பயன்படுத்தி வருவதால், சாலையில் நடந்து கொண்டிருக்கும்போதே வாட்ஸ் அப், ஃபேஸ்புக், டுவிட்டர் மற்றும் மெசேஜ் ஆகியவற்றில் ஈடுபடுபவர்கள் அதிகளவு காணப்படுகிறது. இதனால் அதிகளவு விபத்து நடப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தியை அடுத்து ‘டெக்ஸ்ட் வாக்கிங் லேன்’ என்ற தனிப்பாதையை சென்னையில் அறிமுகப்படுத்துவதற்கான பரிந்துரை சென்னை மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, “புதிதாக போடப்படும் சாலைகளில், அகலமான ஒரு சில சாலைகளில் மட்டும் டெக்ஸ்ட் வாக்கிங் லேன் அமைக்க முயற்சி செய்யலாமா என்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். இதற்கு பெரிதாக செலவாகாது. ஆணையரிடம் இதற்கான பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன” என்று கூறினார்.

ஏற்கனவே இந்த வசதி சீனாவில் உள்ள சாங்கிங் நகரம் மற்றும் வாஷிங்டன் டி.சி.யில் உள்ளது. இதில் சாங்கிங் நகரத்துடன் சென்னை மாநகராட்சி சமீபத்தில் சகோதரி நகரங்கள் ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English Summary : Chennai Corporation recommended for separate passage for separate passage for smartphone users.