பொதுமக்களுக்கு தேர்தல் குறித்தும், தேர்தலில் வாக்களிப்பது எந்த அளவுக்கு முக்கியம் என்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறும் பகுதிகளில் சப்ளை செய்யப்படும் ஆவின் பால் பாக்கெட்டுக்களில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது, “ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, பல்வேறு விழிப்புணர்வு பிரசார பணிகளை தேர்தல் ஆணையம் செயல்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்குதல், சுவரொட்டிகள், விளம்பர பலகைகள் அமைத்தல், மாணவ, மாணவியரிடையே உறுதிமொழி பத்திரம் பெறுதல், மாணவர்கள் பங்கேற்கும் மனிதச் சங்கிலி, பேரணி நடத்துதல், பொது இடங்களில் கையெழுத்து பிரசாரம் மேற்கொள்ளுதல், கலைநிகழ்ச்சிகள் நடத்துதல், குறும்படங்கள் திரையிடுதல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும் ஆர்.கே. நகர் தொகுதியில், பொது மக்களுக்கு விநியோகிக்கப்படும் ஆவின் பால் பாக்கெட்டுகளில், “கண்ணியத்துடன் வாக்களியுங்கள், உங்கள் வாக்கு உங்கள் எதிர்காலம்’, “உங்கள் வாக்கினை சரியாக பயன்படுத்துவீர்’, வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்துவீர்’ உள்ளிட்ட வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்டு வழங்கப்படுகின்றன. இது போன்ற விழிப்புணர்வுப் பணிகள் வாக்குப் பதிவு நடைபெறும் நாள் வரை மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

English Summary : R.K.Nagar election Awareness slogans are passed through Aavin milk packet in Chennai.