2005-ம் ஆண்டுக்கு முன்பு அச்சடிக்கப்பட்ட பழைய கரன்ஸியை வங்கியில் கொடுத்து மாற்றுவதற்கான காலக்கெடு இன்னும் 10 நாள்கள் மட்டுமே இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

2005-ம் ஆண்டுக்கு முன்பு அச்சடிக்கப்பட்ட கரன்ஸிகளை புழக்கத்தில் இருந்து விலக்கிக்கொள்ள கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. அதன்படி அந்த கரன்ஸியை வங்கி கிளைகளில் மாற்றிக்கொள்ள ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி அதற்கான காலக்கெடு வரும் ஜூன் 30 என அறிவுறுத்தி இருந்தது. அந்த காலக்கெடு தேதி முடிய இன்னும் பத்து நாட்கள் மட்டுமே இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஜனவரி 1-ம் தேதியை இதற்கான காலக்கெடுவாக ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்தது. ஆனால் பொதுமக்களின் வேண்டுகோளை அடுத்து ஜூன் 30ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்தது. 2005-ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட கரன்ஸியை அடையாளம் கண்டுபிடிப்பது மிக எளிது. 2005ஆம் ஆண்டுக்கு பின்னர் கரன்ஸி அச்சடிக்கும்போது அதில் வருடம் குறிப்பிடப்பட்டிருக்கும். எனவே வருடம் இல்லாமல் இருக்கும் கரன்ஸிகள் அனைத்தும் 2005ஆம் ஆண்டுக்கு முந்தையவை என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ளலாம் இதன் மூலம் கள்ள நோட்டுகளை தடுக்க முடியும்.

இதுவரை 2005ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சடிக்கப்பட்ட 164 கோடி கரன்ஸிகள் ரிசர்வ் வங்கிக்கு வந்திருக்கிறது என்றும் இதன் மதிப்பு 21,750 கோடி ரூபாய் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

English Summary : Reserve bank announced to change currency which is created before 2005 with a 10 days deadline.