இதுவரை மருத்துவக் கல்லூரிகளில் மட்டுமே மருத்துவ படிப்பு படிக்கும் சூழல் இருந்த நிலையில் தற்போது நாட்டிலேயே முதன் முறையாக ஐஐடி கல்வி மையத்திலும் இனி மருத்துவப் படிப்பு படிக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

இந்திய தொழில்நுட்ப கல்வியகமான ஐஐடி நிறுவனம் பொறியியல் கல்வியை பயிற்றுவிப்பதில் உலகப் புகழ் பெற்றது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அந்த அளவுக்கு ஐஐடியில் படிப்பின் தரம் இருக்கும். இந்நிலையில்.காரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி நிறுவனத்தில் விரைவில் எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காரக்பூர் ஐஐடி இயக்குநர் பார்தா பிரதிம் சக்ரபர்த்தி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘ஐஐடி காரக்பூர் வளாகத்தில் டாக்டர் பி.சி.ராய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிலையம் 3 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டு வருவதாகவும், இது 400 படுக்கைகள் வசதி கொண்ட மிகப்பெரிய மருத்துவமனையாக திகழும் என்றும் இந்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம் வரும் 2017ஆம் ஆண்டு இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இந்த பி.சி.ராய் கல்வி நிலையத்தில் மருத்துவ இளங்கலை படிப்பு பயிற்றுவிக்க இந்திய மருத்துவக் கழகத்தில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அனுமதி கிடைத்ததும் இங்கும் மாணவர்கள் எம்.பி.பி.எஸ் பட்டப்படிப்பு படிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

நாட்டிலேயே மருத்துவப் படிப்பை வழங்கும் முதல் ஐஐடி நிறுவனம் என்ற பெருமையை ஐ.ஐ.டி.காரக்பூர் பெறும். பி.சி.ராய் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பொதுமக்களுக்கான மருத்துவ சேவையுடன் பயோமெடிக்கல் தொடர்பான ஆய்வுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்” என்று அவர் மேலும் கூறினார்.

English Summary : Kharagpur IIT planning to join MBBS course into their campus and become first IIT to have MBBS.