கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங்கில் கலந்து கொள்வதை எதிர்த்து மாணவர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது சமீபத்தில் விசாரணை நடத்திய நீதிமன்றம், “‘இந்த வழக்கு விசாரணை முடியும் வரை மருத்துவ கல்விக்கான கவுன்சிலிங்கில் கலந்துக் கொண்ட மாணவர்களுக்கு கல்லூரிகளை ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பிக்கக்கூடாது’ என்று தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று நீதிபதிகள் சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, எம்.வேணுகோபால் ஆகியோர் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு தொழில் கல்வி மாணவர்கள் சேர்க்கை சட்டத்தை 2006-ம் ஆண்டு தமிழக அரசு உருவாக்கியது. இந்த சட்டத்துக்கு இந்திய மருத்துவ கல்வி கவுன்சில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உட்பட அனைத்து அமைப்புகளும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டத்துக்கு கடந்த 2007-ம் ஆண்டு மார்ச் 3-ந் தேதி ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை இந்த ஐகோர்ட்டு கடந்த 2007-ம்ஆண்டு தள்ளுபடி செய்துள்ளது. இவ்வாறு அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த சட்டத்தின் அடிப்படையில்தான் தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.
மருத்துவ படிப்புக்கு சேர மதிப்பெண், வயது உள்ளிட்ட தகுதிகளை கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். லிபிகா குப்தா என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மருத்துவ கல்விக்கான முதல் சுற்று கலந்தாய்வை ஜூன் 25-ந் தேதிக்குள் நடத்த வேண்டும். அந்த முதல் சுற்றில் தகுதியான மாணவர்களுக்கு, ஜூலை 3-ந் தேதிக்குள் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை கொடுக்கவேண்டும் என்று கூறியுள்ளது. இதேபோல்தான், 2-வது சுற்று, 3-வது சுற்று கலந்தாய்வுகளுக்கும் தேதியை சுப்ரீம் கோர்ட்டு நிர்ணயம் செய்துள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த கல்வியாண்டில் தேர்ச்சிப்பெற்றவர்கள் அதிக மதிப்பெண் எடுத்துள்ளனர் என்று மனுதாரர்கள் கூறுவதை ஏற்கமுடியாது. இந்த இரண்டு கல்வியாண்டு மாணவர்களும் ஒரேவிதமான பாடத்திட்டத்தின் கீழ்தான் படித்துள்ளனர். ஒரேவிதமான தேர்வு முறையில்தான் தேர்வை எழுதியுள்ளனர். அவர்களது விடைத்தாள்களும் ஒரேவிதமாகத்தான் மதிப்பீடு செய்து, மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, எங்களை விட கடந்த கல்வியாண்டு மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்து விட்டனர் என்று மனுதாரர்கள் கூறுவதை சட்டப்படி ஏற்கமுடியாது. மேலும் மனுதாரர்கள் மருத்துவ கல்விக்கான கலந்தாய்வு விளக்க குறிப்பேட்டை எதிர்த்து வழக்கு தொடரவில்லை. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவு ஒன்றில், ‘இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கிறோம். அதுவரை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளலாம். ஆனால், கல்லூரியை ஒதுக்கீடு செய்து இறுதி ஆணை பிறப்பிக்கக்கூடாது’ என்று கூறியுள்ளனர்.
English Summary : MBBS Counseling Case Judgement was postponed without specifying any date.